புதுச்சேரி

புதுச்சேரி கடல் நீர் சிவப்பு பழுப்பு நிறத்திற்கு மாற்றம்: வண்டல் மண் கலப்பையே காரணம் என தகவல்

புதுச்சேரி, அக்டோபர் 26: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் கடல் நீர் நீல நிறத்திலிருந்து செம்மண் பழுப்பு நிறத்திற்கு மாறி காட்சியளிக்கிறது.

இது ஆபத்தானதா என பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கடல் நிறம் மாறியதற்கான உண்மையான காரணம் வண்டல் மண் கலப்பதுதான் என்ற விஞ்ஞான தகவல் தெரிய வந்துள்ளது. கனமழையின் போது நிலத்தில் உள்ள செம்மண், களிமண் மற்றும் வண்டல் மண், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக கடலில் கலப்பதாகக் கூறப்படுகிறது. புதுச்சேரி பகுதியில் இருக்கும் இரும்புச்சத்து அதிகம் உள்ள லேட்ரைட் மண்ணில் உள்ள இரும்பு ஆக்சைடு தண்ணீருக்கு சிவப்பு பழுப்பு நிறத்தை கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கடலோர ஆராய்ச்சி மைய ஆய்வின்படி இது தற்காலிகமானது என்றும், மழை நின்ற ஓரிரு நாளில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கூறப்படுகிறது. மேலும் மழைநீருடன் கழிவுநீரும் அதிகம் கலந்து கடலுக்குள் செல்வதால் அடுத்த சில நாட்களில் ஊட்டச்சத்து அதிகரித்து பிளாங்கடன் பெருகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடல்நீர் செம்மண் நிறத்தில் இருக்கும் வரை மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் கடல் வேறு நிறத்திற்கு மாறியதை ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன