தமிழ்நாடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முகப்புப் பலகையை தமிழில் அமைக்க வேண்டும்: ஆம் ஆத்மி வழக்கறிஞர்கள் பிரிவு கோரிக்கை!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தின் முகப்புப் பெயர் பலகையை தமிழிலும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் பார் கவுன்சில் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் கே. கதிரவனிடம், ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு வழக்கறிஞர் அணியினர் இன்று நேரில் சந்தித்து இக்கோரிக்கை மனுவை வழங்கினர். பார் கவுன்சில் வளாகத்தின் முன்புறம் உள்ள முதன்மைப் பெயர்ப் பலகையில் அன்னைத் தமிழிலும் பெயர் இடம்பெற வேண்டும் என்பது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் விருப்பமாக உள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த 2025 ஜூன் 20-ஆம் தேதி மனு அளிக்கப்பட்டிருந்ததை நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர். அந்த முந்தைய மனுவின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தமிழ் மொழியிலான பெயர் பலகை அமைப்பதற்கான தீர்மானம் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் தலைவர் கே. கதிரவன் தெரிவித்தார்.

மேலும், இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மிக விரைவில் முகப்புப் பெயர்ப் பலகை தமிழில் உரிய முறையில் நிறுவப்படும் என்றும் அவர் நேரில் உறுதி அளித்துள்ளார். வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறையினர் மத்தியில் இந்த உறுதிமொழி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், விரைவில் இக்கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாக வழக்கறிஞர் அணியினர் தெரிவித்துள்ளனர்.

English summary: The Aam Aadmi Party’s advocates’ wing in Tamil Nadu petitioned K. Kathiravan, chairman of the Bar Council of Tamil Nadu and Puducherry, asking that the Bar Council office’s name board also be in Tamil. Kathiravan said a resolution to install a Tamil name board has already been proposed, that the work is at its final stage, and that the board will be installed very soon.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன