புதுச்சேரியில் புதிதாகத் தேர்வான இளநிலை எழுத்தர்களுக்கு 18 நாள் பயிற்சி: அரசு உத்தரவு வெளியீடு

புதுச்சேரி, 29/10/2026: புதுச்சேரி அரசுத் துறைகளில் 2024-ஆம் ஆண்டு நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளநிலை எழுத்தர்களுக்கு (LDC) பணிக்கால சிறப்புப் பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பெருந்தலைவர் காமராஜர் நிர்வாகப் பயிற்சி நிறுவனம் (PKATIP) வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசின் நிர்வாகச் சீர்திருத்தப் பிரிவு சார்புச் செயலாளரும் பயிற்சி நிறுவன உறுப்பினர் செயலருமான எஸ். சிவக்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், முதற்கட்டமாக தேர்வாகியுள்ள இளநிலை எழுத்தர்களுக்கான முதல் பேட்ச் பயிற்சி வகுப்புகள் புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் ‘சி’ பிளாக், முதல் தளத்தில் உள்ள பயிற்சி அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை மொத்தம் 18 வேலை நாட்கள் இப்பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளிலும் முழு நேரமாக நடத்தப்படும் என்பதால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் கட்டாயம் அனைத்து நாட்களிலும் கலந்துகொள்ள வேண்டும். ஊழியர்கள் காலை 8.45 மணிக்கும், மதிய அமர்வுக்கு பிற்பகல் 2.15 மணிக்கும் பயிற்சி அரங்கில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி காலம் பணி நாளாகவே (On Duty) கருதப்படும் எனவும், காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட வெளிப் பிராந்தியங்களிலிருந்து வரும் ஊழியர்களுக்கு பயணப்படி (TA/DA) வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊழியர்களை அந்தந்த துறைத் தலைவர்கள் உரிய காலத்தில் விடுவித்து அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் ஊழியர்கள் தினசரி குறிப்பேடு பராமரிக்க வேண்டும் என்றும், இறுதி நாளில் நடத்தப்படும் கலந்துரையாடல் மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)
