புதுச்சேரி

உருளையன்பேட்டை உப்பனாறு வாய்க்காலில் அடைப்பு: எம்.எல்.ஏ நேரு என்கிற குப்புசாமி குற்றம் சாட்டு

புதுச்சேரி, அக்டோபர் 25: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் உப்பனாறு வாய்க்கால் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது.

கல் மற்றும் மண் குவியலால் உப்பனாறு வாய்க்காலில் வெள்ளநீர் வெளியேறாமல் தேங்கி குடியிருப்புகளில் புகும் அபாயம் எழுந்துள்ளதாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு என்கிற குப்புசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாந்திநகர், இளங்கோ நகர், சாரதி நகர், கென்னடி நகர், திடீர் நகர், கோவிந்த சாலை, புதுநகர், குபேர் நகர், வாஞ்சிநாதன் வீதி, சுப்பிரமணிய சிவா வீதி, காமராஜர் வீதி, அந்தோனியர் கோவில் வீதி, பாரதிதாசன் வீதி, சகாய மாதா பாடசாலை வீதி, நேரு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து மக்களின் உடைமைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதிகளைப் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் நேரு, உப்பனாறு வாய்க்காலையும் ஆய்வு செய்தார். உப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிக்காக கொட்டப்பட்ட கற்கள் மற்றும் மணல் சுமார் 4 அடி வரை வாய்க்காலில் உள்ளதால் இது போன்ற நிலை ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த கற்களையும் மணலையும் தூர்வாரினாலே மழைநீர் எளிதில் சென்று கடலில் கலக்கும் என்றும், இது போன்ற அடைப்புகளால்தான் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக முதலமைச்சர், துறை அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாகவும், விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படாத பட்சத்தில் உருளையன்பேட்டை தொகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன