ஈசிஆர் சாலையில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதுச்சேரி, அக்டோபர் 26: தட்டாஞ்சவடி தொகுதிக்கு உட்பட்ட ஈசிஆர் சாலையில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமையில், போக்குவரத்து பிரிவு எஸ்பி திவ்யா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தட்டாஞ்சவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் கலந்து கொண்டு பேசுகையில், தட்டாஞ்சவடி தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். வாகன போக்குவரத்தை சீரமைத்தல், விபத்துகளை தடுக்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

