உத்தராகண்டில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்து: பெங்களூருவை சேர்ந்த 5 பயணிகள் உட்பட 6 பேர் பலி
ஜோதிர்மாத், அக்டோபர் 31: உத்தராகண்டில் பத்ரிநாத் கோவிலில் இருந்து ஹெலிகாப்டர் சென்றபோது நேர்ந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த ஐந்து பயணிகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
ட்ரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டர் பத்ரிநாத் கோவிலில் இருந்து டேராடூனில் உள்ள சகஸ்ரதாரா ஹெலிபாடுக்கு சென்று கொண்டிருந்தபோது சமூலி மாவட்டம் ஜோதிர்மாத் அருகே விபத்துக்குள்ளானது. நேற்று பிற்பகல் 1:14 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த ஹெலிகாப்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு பிற்பகல் 3:30 மணி அளவில் விபத்து நடந்த இடத்தை அடைந்தனர். இந்த விபத்தில் விமானி உள்பட ஆறு பேரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் டெல்லியை சேர்ந்த விமானி ஹிமான்சு சபர்வால், பெங்களூருவை சேர்ந்த காவல்துறை அதிகாரி அருண் சலுன்கே, வழக்கறிஞர் சங்கர் கௌடா, பிரதாபா, சுதிர், நடராஜா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



