புதுச்சேரியில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரியில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை, சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தேசிய தொற்றார் நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் திட்ட அலுவலர் டாக்டர் மணிமொழி தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பக்கவாதத்தின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதற்கிடையே, அரசு பொது மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகள் மூலம் முழுமையாக குணமடைந்த நபர் ஒருவருக்கு ‘ஸ்டோக் சாம்பியன்’ என்ற சிறப்பு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பக்கவாதத்தின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தாமதமின்றி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியம் என்றும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மறுவாழ்வு சிகிச்சை முக்கியம் என்றும் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
English summary: A rally involving doctors and medical students was held in Puducherry on World Stroke Day to raise awareness about stroke. Organised by the Puducherry health department, it was flagged off from the Director of Health office by Dr. Manimozhi, programme officer of the National Programme for Prevention and Control of Non-Communicable Diseases, and more than 400 doctors, nurses and medical students took part. A person who fully recovered from stroke at the government general hospital was honoured with the title ‘Stroke Champion’, and speakers stressed early detection, prompt hospital treatment and rehabilitation.