புதுச்சேரி

ஏனாம் புயல் சேத நிவாரணம்: மத்திய அரசிடம் ₹113 கோடி நிதி கோரி புதுவை அரசு அறிக்கை!

புதுச்சேரி, நவ. 3:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆந்திர எல்லையோரப் பிராந்தியமான ஏனாமில், கடந்த அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வீசிய கடுமையான புயல் மற்றும் வெளுத்து வாங்கிய பெருமழையால் பல்வேறு துறைகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ள நீர் சூழ்ந்ததாலும் சூறைக்காற்றினாலும் உட்கட்டமைப்புகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

புயல் பாதிப்புகளைச் சீரமைக்க புதுவை அரசு மற்றும் ஏனாம் பிராந்திய நிர்வாகம் முழுவீச்சில் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகளை உடனடியாக மீட்டெடுப்பதுடன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஏனாம் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகள் குறித்த முதற்கட்ட விரிவான சேத மதிப்பீட்டு அறிக்கையை புதுச்சேரி அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி ₹113.25 கோடி நிதி உதவி கோரியுள்ளது.

மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின்படி, மின்சாரத் துறைக்கு அதிகபட்சமாக ரூ.51,99,75,108 மற்றும் பொதுப்பணித் துறைக்கு ரூ.50,57,71,497 இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மீன்வளத்துறைக்கு ரூ.5,90,06,866, வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூ.2,60,20,000, வேளாண்மை துறைக்கு ரூ.71,40,200, கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ.69,71,000, வீடுகள் சேதத்திற்கு ரூ.38,40,812, நகராட்சித் துறைக்கு ரூ.28,10,100, சுகாதாரத்துறைக்கு ரூ.10,59,700 என மொத்தம் ரூ.113 கோடியே 25 லட்சத்து 95 ஆயிரத்து 283 நிவாரணத் தொகையாகக் கோரப்பட்டுள்ளது.

English summary: Heavy storm and rain on October 27 and 28 caused major damage in Yanam, the Puducherry region on the Andhra border, with floodwater and strong winds badly affecting infrastructure. The Puducherry government has prepared a preliminary damage assessment and sent it to the Centre seeking Rs 113.25 crore in assistance. According to the report, the biggest losses are in the electricity department (about Rs 52 crore) and the public works department (about Rs 50.6 crore), with relief work and restoration of power and drinking water under way.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன