கீழ்புத்துப்பட்டு கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு
புதுச்சேரி, நவம்பர் 3: கீழ்புத்துப்பட்டு சுவாமி விவேகானந்தர் ஊரக சமுதாய கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை எஸ்.எஸ்.பி. திவ்யா ஐ.பி.எஸ். பங்கேற்று தன் பணிக்கால அனுபவத்துடன் கூடிய உண்மை சம்பவங்களுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மாணவ மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவ மாணவிகளுடன் போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகள் பற்றி தனித்தனியாக கேட்டறிந்த அவர், சாலை விதிமுறைகள் பற்றி கருத்து தெரிவித்த மாணவ மாணவிகளுக்கு உடனுக்குடன் நினைவு பரிசுகளை வழங்கினார்.
அன்றாடம் சாலைகளில் நடைபெறும் விபத்துகளில் ஹெல்மெட் அணிந்திருந்தால் பெரும்பாலான உயிர்சேதம் தடுக்கப்பட்டிருக்கும் என புள்ளி விவரத்துடன் அவர் எடுத்துரைத்தார். மேலும் அதிவேகத்தில் பயணிப்பது, டிராபிக் சிக்னலை மதிக்காமல் செல்வது, பார்க்கிங் செய்யக்கூடாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவது, இண்டிகேட்டர் மற்றும் சைடு மிரர் பயன்படுத்தாமல் இருப்பது மற்றும் செல்போன் பேசியபடி வாகனம் இயக்குவது போன்ற விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகள் குறித்து விரிவாக விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் இனி வாழ்நாள் முழுவதும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை இயக்குவது என்ற உறுதிமொழியை எஸ்.எஸ்.பி. திவ்யா ஐ.பி.எஸ். முன்னிலையில் எடுத்துக்கொண்டனர். சத்குரு நானானந்தா அறக்கட்டளை தலைமை நிர்வாகி அனுராதா சுப்பிரமணியன் காவல்துறை அதிகாரிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். இச்சிறப்பு வகுப்பில் பல்வேறு தொழிற்கல்வி பயிலும் சுமார் 200 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
English summary: A special class on road safety awareness was held at the Swami Vivekananda Rural Community College in Keezhputhupattu. Puducherry traffic Senior Superintendent of Police Divya IPS shared real incidents from her service and said, citing statistics, that wearing helmets would prevent most deaths in road accidents. The college teachers took a pledge to always wear helmets while riding two-wheelers, and about 200 students attended.

