கனுவாப்பேட்டை அரசுப் பள்ளியில் மின்னணு கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கனுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் மின்னணு கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் நிலை ஒன்று சுபாங்கி மற்றும் தலைமை ஆசிரியர் நிலை இரண்டு சிவசங்கரி ஆகியோர் தலைமை தாங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். பட்டதாரி ஆசிரியர் தனிகாச்சலம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பழைய கணினிகள், கைப்பேசிகள், தொலைக்காட்சிகள், பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் உள்ளிட்ட பயன்படுத்த முடியாத மின்னணுப் பொருட்கள் மின்னணு கழிவுகளாகக் கருதப்படுவதாக மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. திறந்த வெளியில் இவற்றை வீசுவதால் மண், நீர் மற்றும் காற்று மாசுபடுவதோடு மனிதர்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் விளக்கப்பட்டது.
பயன்படுத்த முடியாத மின்னணுப் பொருட்களை மற்ற குப்பைகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து அங்கீகரிக்கப்பட்ட மின்னணு கழிவு மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மின்னணு கழிவு மேலாண்மையில் மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டுப் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்ட இந்நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.
English summary: An awareness programme on electronic waste management was held at the Government High School in Kanuvapettai near Villianur. Students were told that unusable computers, phones, televisions, batteries and chargers count as e-waste, and that dumping them in the open pollutes soil, water and air. They were advised to collect such items separately and hand them to authorised e-waste recycling centres, and to spread awareness among the public.

