புதுச்சேரி

வில்லியனூரில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் உணர்வு மேம்பாட்டு முகாம்: எம்.எல்.ஏ. ரவிக்குமார் தொடக்கி வைத்தார்!

வில்லியனூர்: புதுச்சேரி அரசு சமூக நலத்துறை இயக்ககம் சார்பில், மத்திய அரசின் முதியோர்களுக்கான தேசிய செயல் திட்டத்தின் (AVYAY) கீழ், முதியோர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் உணர்வு மேம்பாட்டு நிகழ்ச்சி வில்லியனூர் ஆனந்தராஜா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. ரவிக்குமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தார். மேலும், முன்னாள் தலைவர் சி. பாலமுருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கலந்துகொண்ட முதியோர்களைக் கௌரவித்தார். சமூக நலத்துறை அதிகாரிகள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரளான மூத்த குடிமக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முகாமில், மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் முதியோர் பாதுகாப்புச் சட்டங்கள் (MWPSC Acts) குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், முதியோர்கள் தங்களது அன்றாட வாழ்வில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கையாள்வது குறித்தும் அரசு அலுவலர்கள் மற்றும் வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, தற்காலத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி மோசடிகளில் இருந்து முதியோர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு (Cyber Security Awareness) பயிற்சி வழங்கப்பட்டது. முதியோர்கள் தங்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக, கலந்துகொண்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக, ‘பாதுகாப்புடன் கூடிய விழிப்புணர்வுடன், தன்னிறைவு பெற்ற முதியோர் சமூகத்தை உருவாக்குவோம்’ என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன