தமிழ்நாடு

விழுப்புரத்தில் 771 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100.25 கோடி வங்கிக் கடன்: அமைச்சர் என். ஆனந்த் வழங்கினார்!

விழுப்புரம்: விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கலந்துகொண்டு, ரூ.100.25 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகள், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் மற்றும் புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார தன்னிறைவை உறுதி செய்யும் வகையில், மாவட்டத்திலுள்ள 771 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.100.25 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிக்கான இணைப்பாணைகளை அமைச்சர் நேரில் வழங்கினார்.

இக்கடன் தொகை மகளிர் தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசுப் பணியில் இருக்கும் போது மறைந்த ஊழியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 24 தகுதியான நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் ரூ.15.84 கோடி மதிப்பீட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட 22 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் என். ஆனந்த் காணொளி வாயிலாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

பெண்களின் பொருளாதார மேம்பாடும், தடையற்ற கிராமப்புற அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் போதுதான் சமச்சீரான சமூக வளர்ச்சி சாத்தியமாகும் என விழாவில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் எடுத்துரைக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன