புதுச்சேரி

வில்லியனூரில் ரூ.1.26 கோடியில் புதிய கான்கிரீட் சாலை மற்றும் வடிகால் பணிகள்: அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அடிக்கல் நாட்டினார்!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையின் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) பிரிவு சார்பில், வில்லியனூர் மணவெளி பகுதியில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் எல்-வடிவ மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் உள்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் கலந்துகொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணவெளி பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் தெரு, நியூ வெல் தெரு மற்றும் மந்தக்கரை தெரு ஆகிய பகுதிகளில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கவும், பொதுமக்கள் எளிதாகப் பயணிக்கவும் உள்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மேற்கண்ட தெருக்களில் வலுவான சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் இருபுறமும் சீரான முறையில் மழைநீர் வெளியேறும் வகையில் எல்-வடிவ கான்கிரீட் வடிகால் அமைப்பதற்காக மொத்தம் ₹ 1,26,51,192/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவிக்குமார் முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைவாகவும், தரமான முறையிலும் குறித்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில் மணவெளி குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்காமல் சுகாதாரமான சூழல் நிலவுவதுடன், அப்பகுதியின் போக்குவரத்து வசதியும் கணிசமாக மேம்படும் என்று பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன