தமிழ்நாடு

திருப்பத்தூரில் பழைய சாலையை சுரண்டாமல் புதிய சாலை அமைப்பதா? – நகராட்சி ஆணையரிடம் அறப்போர் இயக்கம் அதிரடி மனு!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலைகளை மறுசீரமைக்கும் போது பழைய தார்ச்சாலையை முறையாக அகற்றாமல் அதன் மீதே புதிய சாலைகள் அமைப்பதால் ஏற்படும் இன்னல்கள் குறித்து நகராட்சி ஆணையர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அறப்போர் இயக்கம் சார்பில் விரிவான மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளின்போது, ஏற்கெனவே உள்ள பழைய சாலையை அரவை (Milling) செய்து அகற்றாமல் தொடர்ந்து அதன் மேலேயே புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சாலைகளின் மட்டம் தொடர்ந்து பல அடிகள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் சாலையைவிட மிகவும் தாழ்வான நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

சாலை உயரம் தொடர்ந்து அதிகரிப்பதால் மழைக்காலங்களில் சாலைகளில் ஓடும் மழைநீரும் கழிவுநீரும் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வீட்டு வாசலை விட சாலை உயரமாக மாறுவதால் வாகனங்களை வீடுகளுக்குள் கொண்டு செல்வதிலும், பாதசாரிகள் நடமாடுவதிலும் கடுமையான சிரமங்கள் ஏற்படுகின்றன. விதிகளை மதிக்காமல் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிகளால் பொதுமக்களின் வாழ்வாதாரமும் வீடுகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் எஸ்.சாந்தி, திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி உதவி அலுவலர், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் (AD) ஆகியோரை நேரில் சந்தித்தனர். அப்போது பொதுமக்களின் பாதிப்புகளை விளக்கி, சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி விரிவான கோரிக்கை கடிதம் மற்றும் துண்டறிக்கைகளை வழங்கினர்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பழைய சாலைகளை முறையாக அகற்றிவிட்டே புதிய தார்ச்சாலைகளை அமைக்க வேண்டும் எனவும், ஒப்பந்ததாரர்களின் அலட்சியப் போக்கைத் தடுத்து விதிமீறல்களை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன