பள்ளி மாணவர்களை ரவுடிகள் என இழிவுபடுத்திய அமைச்சர் ஜெகதீஸ்வரி பதவி விலக வேண்டும்: புதுவையில் சீ.சு.சுவாமிநாதன் போர்க்கொடி!
அரசுப் பள்ளி மாணவர்களை ரவுடிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதுடன், தலைமுடியை ஒழுங்காக வெட்டாவிட்டால் மொட்டை அடிக்க உத்தரவிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேசிய மக்கள் முன்னணி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சீ.சு.சுவாமிநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, பள்ளி மாணவர்களை ரவுடிகளோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். 10 முதல் 12 வயதுக்குட்பட்ட பள்ளிச் சிறுவர்களை ரவுடிகள் என்று பொதுவெளியில் முத்திரை குத்துவது குழந்தைகளின் மென்மையான மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும் அநாகரிகச் செயலாகும். மேலும், மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டவில்லை என்றால் ஆசிரியர்களே அவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று அவர் பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்தியாவின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) பிரிவு 17-ன் படி, மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21A-ன் படி கல்வி என்பது அடிப்படை உரிமையாகும். ஆனால், தோற்றம் மற்றும் தலைமுடியை காரணம் காட்டி மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்க உத்தரவிடுவது அப்பட்டமான சட்டவிரோதச் செயலாகும். மாணவர்களின் புறத்தோற்றத்தை வைத்தே காவல்துறை குற்றவாளிகளாக முடிவு செய்துவிடுகிறது என்று பேசி, காவல்துறையின் பாரபட்ச அணுகுமுறையை அமைச்சர் நியாயப்படுத்துவது சமூக நீதிக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் முற்றிலும் எதிரானது.
அமைச்சரின் இந்த அத்துமீறிய பேச்சை ‘தாயின் பார்வையில் பேசினார்’ என்று சக அமைச்சர் வன்னி அரசு நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது; எந்தத் தாயும் தன் குழந்தைக்கு பள்ளியில் மொட்டை அடிக்கச் சொல்ல மாட்டார். எனவே, பள்ளி மாணவர்களை இழிவுபடுத்திப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி பகிரங்க மன்னிப்புக் கேட்பதுடன், அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அத்துடன், உடை அல்லது சிகை அலங்காரத்தைக் காரணம் காட்டி எந்த மாணவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றவோ, தண்டிக்கவோ கூடாது எனத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலக் கல்வித்துறைகள் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



