மேகமலை ஆக்கிரமிப்பு வழக்கு: முன்னாள் நீதிபதி பி.ஆர். கபாய் தலைமையில் குழு அமைக்க உத்தரவு
சென்னை, நவம்பர் 7: மேகமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கபாய் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வருசநாடு, மேகமலை, தும்மகுண்டு, சிங்கராஜபுரம், நறியூத்து உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக கூறி மக்களை வெளியேற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனுமதியின்றி சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்கள் செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகமலை விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கபாய் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஐந்து மாதங்களுக்குள் இந்த குழுவை அமைக்க வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் கிராம சபைகளை உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேகமலையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களையும் தங்கு விடுதிகள் உள்ளிட்ட கட்டுமானங்களையும் அகற்றுவது தொடர்பான செயல்திட்டத்தை உருவாக்கி கபாய் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மேகமலை பகுதியில் உள்ள நபர்களில் பழங்குடியினர் யார் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர் யார் என்ற விவரங்களை இந்த குழு ஆய்வு செய்யும் என்றும், குழு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பணியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.