புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்: அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!

புதுச்சேரி, அக். 23: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை (Special Summary Revision) மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவிப்பிரகாஷ் ஐ.ஏ.எஸ். தலைமையில் இன்று காலை 11:00 மணியளவில் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 6 முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தொடர்பான சட்ட விதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய அறிவுறுத்தல்கள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி விரிவாக விளக்கமளித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் செவ்வனேவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தி முடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்குத் தேர்தல் துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பா. தில்லைவேல், மு. கந்தசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


