புதுச்சேரி

புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாக உப்பனாறு வாய்க்காலில் தேங்கிய மழைநீர் – எம்எல்ஏ நேரு குப்புசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, அக்டோபர் 25: புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உப்பனாறு வாய்க்கால் முழுவதும் நிறைந்து, மழைநீர் ஆங்காங்கே தடைபட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சாந்தி நகர், இளங்கோ நகர், சாரதி நகர், கென்னடி நகர், திடீர் நகர், கோவிந்த சாலை புதுநகர், குபேர் நகர், வாஞ்சிநாதன் வீதி, சுப்பிரமணிய சிவா வீதி, காமராசர் வீதி, அந்தோனையர் கோவில் வீதி, பாரதிதாசன் வீதி, சகாய மாதா பாடசாலை வீதி, நேரு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் உடைமைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகள் மிகவும் காலதாமதமாகவும், தோய்வாகவும், தான் தோன்றித்தனமாகவும் நடைபெறுவதே மழைநீர் தேங்குவதற்குக் காரணம் என்று உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழகத்தின் தலைவருமான நேரு என்கின்ற குப்புசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகளுக்காக கொட்டப்பட்ட கற்கள் மற்றும் மணல் சுமார் நான்கு அடி வரை வாய்க்காலில் உள்ளதால் இந்த நிலை ஏற்படுவதாகவும், அந்த நான்கு அடி கற்கள் மற்றும் மணலை தூய்வாரினாலே மழைநீர் எளிதில் சென்று கடலில் கலக்கும் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து முதல்வர், துறை அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தனது ஆதங்கத்தைத் தெரிவித்த அவர், விரைவில் தீர்வு எட்டப்படாத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என அரசை கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன