புதுச்சேரி

ஆரோவில் அருகே பயங்கரம்: புதுச்சேரி ரியல் எஸ்டேட் புரோக்கர் முந்திரி தோப்பில் சரமாரியாக வெட்டி படுகொலை!

புதுச்சேரி:

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியில் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ஜீவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், நேற்று இரவு தனது வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் ஆரோவில் அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் முந்திரி தோப்பு பகுதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது திடீரென அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட மர்மக் கும்பல், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ராஜேந்திரகுமாரை நோக்கிப் பாய்ந்துள்ளது. மதுபோதையில் இருந்த நண்பர்கள் சுதாரித்து தப்புவதற்குள், கண் இமைக்கும் நேரத்தில் அக்கும்பல் ராஜேந்திரகுமாரை தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் பலத்த வெட்டுக் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்ததை உறுதி செய்த அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டக்குப்பம் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ரூபன்குமார் மற்றும் ஆரோவில் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கிருமாம்பாக்கம் பகுதியில் நிலம் விற்றதில் வந்த பணத்தைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட முன்விரோதமே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள 5 பேர் கொண்ட கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன