தமிழ்நாடு

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை உடனே அறிவிக்கை செய்க: தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையத்திடம் சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ. அதிரடி மனு!

சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் சதுப்புநிலங்களை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ராகேஷ் குமார் ஜகானியா, IFS அவர்களை பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது பள்ளிக்கரணை சதுப்புநிலப் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் ஈரநிலங்கள் மேலாண்மை தொடர்பாக முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் அளித்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த கோரிக்கை மனுவில், பள்ளிக்கரணை வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள 65 நீர்நிலைகள் மற்றும் நீர் வரும் முக்கிய வழிகளை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் தாக்கப் பகுதிகளுடன் (Zone of Influence) உடனடியாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017-ன் (Wetlands Conservation and Management Rules, 2017) கீழ் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை முறைப்படி உடனடியாக அரசாணை வாயிலாக அறிவிக்கை (Notification) செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையம் (Tamil Nadu State Wetland Authority) உருவாக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை மாநிலத்தில் உள்ள ஒரேயொரு சதுப்புநிலம் கூட முறையாக அறிவிக்கை செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அவர் பதிவு செய்தார். மேலும், இந்த ஆணையம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட இதன் ஆய்வுக் கூட்டம் கூட்டப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக நடத்தி அனைத்து சதுப்புநிலங்களையும் அறிவிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இவற்றுடன், உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளையும் முழுமையாக அளவீடு செய்து வரையறை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், உலக வங்கியின் கடலோர சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டமான ‘ஷோர்’ (World Bank Project – SHORE) திட்டத்தின் கீழ் பள்ளிக்கரணையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதைகளைச் சுற்றுச்சூழல் நலன் கருதி உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மனுவில் தீவிரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன