தமிழ்நாடு

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

சென்னை: தேனி மாவட்டச் சிறையில் இருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் சிறைத்துறை நிர்வாகமும் சட்டம்-ஒழுங்கும் முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர் நியமன விவகாரங்கள், நீதிமன்றத்தின் கண்டனங்கள் என சட்டத்துறை ஒருபுறம் நிலைகுலைந்து நிற்க, மின்துறையில் மின்கொள்முதல் ஊழல் மற்றும் தொடர் மின்வெட்டு போன்ற புகார்கள் நிலவி வருகின்றன. இந்த சூழலில் தற்போது சிறைத்துறையிலும் பெரும் பாதுகாப்பு குளறுபடிகள் அரங்கேறி வருவது ஆளும் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது என அவர் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், ஏற்கனவே சென்னை புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே விழித்துக் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் அரசு பலப்படுத்தியிருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக முதலமைச்சர் புழல் சிறைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பின்னரும் கூட, சிறைத்துறையில் எவ்வித பாதுகாப்பும் உறுதி செய்யப்படவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் அவலநிலை தொடர்வது மிகுந்த வேதனைக்குரியது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலைகளிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும்போது, சாமானிய மக்கள் நடமாடும் பொதுவெளிகளில் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழகத்தில் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, தேனி சிறையிலிருந்து தப்பியோடிய அனைத்து கைதிகளையும் விரைந்து கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை முறையாகப் பராமரிப்பதில் ஆளும் திமுக அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன