தூத்துக்குடியில் கோடைக்கால குடிநீர் விநியோக முன்னெச்சரிக்கை பணிகள்: எம்.பி. கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்யும் வகையில், குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று நேரில் சென்று விரிவான கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சுத்திகரிப்பு மையத்தின் தற்போதைய செயல்பாடுகள், நாள்தோறும் சுத்திகரிக்கப்படும் நீரின் கொள்ளளவு மற்றும் நகர் பகுதிக்கு விநியோகிக்கப்படும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கோடைக்காலத்தில் வழக்கத்தை விடக் கூடுதலாக எழக்கூடிய குடிநீர் தேவையைத் தட்டுப்பாடின்றி எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கள ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி உடனிருந்து, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் பகிர்மானப் பணிகள் மற்றும் கட்டமைப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை எடுத்துக் கூறினார். மேலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வின்போது வலியுறுத்தப்பட்டது.



