காரைக்காலில் அமைச்சர் ராஜவேலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை!

காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன்கள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் திரு. ராஜவேலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பல்வேறு வாழ்வாதார மற்றும் கல்வி சார்ந்த கோரிக்கைகளை அமைச்சரின் கவனத்திற்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தேசிய மக்கள் முன்னணி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சீ.சு.சுவாமிநாதன், தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் இன்னாசிராக், செயலாளர் டேவிட் ஜோசப் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தின்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிலுவை, மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு வசதிகள், உணவு தரம் மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் பேசிய தேசிய மக்கள் முன்னணி நிறுவனத் தலைவர் சீ.சு.சுவாமிநாதன், அண்டை மாநிலமான தமிழகத்தில் ஆதிதிராவிட மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்காக ‘அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்’ வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் அயல்நாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்வது போல், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதன்மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் சர்வதேச அளவில் உயர்கல்வி பெற்று பயனடைவர் என்றும் தெரிவித்தார்.
இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திரு. ராஜவேலு, மாணவர்களின் நலன் கருதி இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து, விரைவில் உரிய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அமைச்சரின் இந்த ஆக்கப்பூர்வமான உறுதிமொழிக்குச் சமூக அமைப்புகளும் மாணவர் கூட்டமைப்பினரும் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)



