தேசியம்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுடெல்லி, அக். 25:

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மருத்துவ சாதனங்களை கிருமிநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் (DGHS), அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சில தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய (Single-use) மருத்துவ உபகரணங்கள் மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக இருதயவியல், சிறுநீரகவியல், புற்றுநோயியல், நரம்பியல் மற்றும் இருதய-மார்பக அறுவை சிகிச்சை போன்ற முக்கியமான பிரிவுகளில் இத்தகைய விதிமீறல்கள் நடப்பது தீவிர கவனத்திற்கு வந்துள்ளது.

ஒருமுறை பயன்பாட்டிற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட உபகரணங்களை மறுமுறை கிருமிநீக்கம் செய்தாலும், அவை முழுமையான பாதுகாப்புத் தன்மையைப் பெறுவதில்லை. இத்தகைய நடைமுறைகளால் நோயாளிகளுக்கு தீவிர நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும், சிகிச்சை உபகரணங்கள் செயலிழந்து உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையும் உண்டாகிறது. அத்துடன் மருத்துவ சிகிச்சைகளின் செயல்திறன் குறைந்து புதிய சிக்கல்கள் உருவாக வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து யூனியன் பிரதேசங்களின் எல்லைக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்களில் மறுபயன்பாட்டு தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் சோதனைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன