தமிழ்நாடு

பேராசிரியர் கலையரசன் சட்டவிரோதக் கைது த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) உதவிப் பேராசிரியரும், ‘The Dravidian Model’ புத்தகத்தின் ஆசிரியருமான முனைவர் கலையரசன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் கலையரசன் அவர்களை சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சாதாரண நபரோ அல்லது குற்றப் பின்னணி கொண்டவரோ அல்ல. இந்தியாவின் தலைசிறந்த ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற கல்வியாளர் ஆவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முனைவர் கலையரசனின் கல்விப் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய அவர், “கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகப் புகழ்பெற்ற ‘The Dravidian Model’ நூலின் ஆசிரியர்களில் கலையரசனும் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவிலும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயாரிப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். தற்போது தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அப்படிப்பட்ட ஒருவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் எனக் கூறுவதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து த.வெ.க. அரசைக் கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின், ஆட்சியில் நிலவும் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காகவும், திராவிட ஆட்சியின் சாதனைகளை உலகம் அறியச் செய்ததற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். செய்யாத குற்றத்திற்காக செல்போனைப் பறித்து, அடிப்படை உரிமைகளை மறுத்து அலைக்கழித்தது பாசிசத்தின் உச்சம் என்றும், குற்றவாளிகளை விடுத்து கல்வியாளர்களை மிரட்டும் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன