நெடுங்காடு மனோன்மணி மாரியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்: அமைச்சர் மற்றும் எம்எல்ஏவிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு மனோன்மணி மாரியம்மன் கோவில் திருக்குளத்தை முறையாகத் தூர்வாரி புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகர் மற்றும் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா ஆகியோருக்கு அப்பகுதி சமூக ஆர்வலர் ஆர். கோபி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
நெடுங்காடு அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி மாரியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக தலமாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெறும். மேலும், இந்த திருக்குளத்தில் தான் பாரம்பரியமிக்க தெப்பத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது இந்த திருக்குளம் போதிய பராமரிப்பின்றி தூர்ந்து போயுள்ளது. இதனால் விழா காலங்களில் தெப்ப உற்சவத்தை நடத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், வழிபாட்டிற்கு வரும் பக்தர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரைக்கால் நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க காரைக்கால் அம்மையார் கோவில் குளம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் அவர்களின் சீரிய முயற்சியால் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. அதே பாணியில் நெடுங்காடு மாரியம்மன் கோவில் திருக்குளத்தையும் தரம் உயர்த்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குளத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் தரமான கருங்கல் படிக்கட்டுகள் அமைத்தல், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கும் வகையில் குளத்தை ஆழப்படுத்துதல், மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் சுற்றிலும் மின்விளக்கு மற்றும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காரைக்கால் பிராந்திய மக்களின் ஆன்மீக மற்றும் அடிப்படை தேவைகள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் சூழலில், நெடுங்காடு கிராமப்புற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இத்திருக்குள சீரமைப்புப் பணிகளுக்கு அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.



