மழை விடுமுறையை மீறி இயங்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை: அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு!

புதுச்சேரி, 27/10/2026:
புதுச்சேரியில் கனமழை காரணமாக அரசு அறிவிக்கும் பள்ளி, கல்லூரி விடுமுறையை மீறி வகுப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் ஏ. நமச்சிவாயத்திடம் ‘புதுவை புதிய தலைமுறை’ (We The Gen X Nxt Gen Pondy) அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆர். பவித்திரன் அமைச்சர் நமச்சிவாயத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கனமழை மற்றும் தீவிர வானிலை நிலவும் சூழலில் மாணவர்களின் நலன் கருதி அரசு விடுமுறை அறிவித்த போதிலும், சில தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களை பாதுகாப்பாக விடுவிக்காமல் வகுப்புகளைத் தொடர்வது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு, குடியிருப்புகளில் நீர் தேக்கம் மற்றும் போக்குவரத்து சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மோசமான வானிலை நிலவும் போது, உயிரைப் பணயம் வைத்து வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படக் கூடாது. கல்வி அட்டவணையை விட மாணவர்களின் பாதுகாப்பே முதன்மையானது.
எனவே, கனமழை விடுமுறை அறிவிப்பை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கட்டாயம் பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்; அரசு உத்தரவை மீறி மாணவர்களை வர வற்புறுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; விடுமுறை அறிவிப்புகளை உடனுக்குடன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொண்டு சேர்க்கும் தகவல் தொடர்பு நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

