புதுச்சேரி

புதுச்சேரியில் ஸ்மார்ட் பிடிஎஸ் இணையதளம் மூலம் ரேஷன் அட்டை தொடர்பான ஏழு சேவைகள் அறிமுகம்

புதுச்சேரி, அக்டோபர் 29: புதுச்சேரியில் பொதுமக்களின் வசதிக்காக ஸ்மார்ட் பிடிஎஸ் இணையதளம் வாயிலாக ரேஷன் அட்டை தொடர்பான ஏழு சேவைகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன.

புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை பொதுமக்களின் வசதிக்காக ரேஷன் அட்டை தொடர்பான சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஸ்மார்ட் பிடிஎஸ் இணையதளம் வாயிலாக ரேஷன் அட்டையில் விவரங்களை திருத்துதல், உறுப்பினரை நீக்குதல், முகவரியை மாற்றுதல், குடும்ப தலைவரை மாற்றுதல், ரேஷன் அட்டையை ஒப்படைத்தல், அட்டையை நீக்குதல் மற்றும் உறுப்பினரை வேறு குடும்ப அட்டைக்கு மாற்றுதல் என மொத்தம் ஏழு சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பொது சேவை மையங்கள் எனப்படும் சிஎஸ்சி மையங்கள் வாயிலாக விவரங்களை திருத்துதல், உறுப்பினரை நீக்குதல், முகவரியை மாற்றுதல், மற்றும் குடும்ப தலைவரை மாற்றுதல் ஆகிய நான்கு சேவைகள் மட்டுமே தற்போது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் அட்டை பெறுதல் மற்றும் குடும்ப அட்டையில் புதிய உறுப்பினரை சேர்த்துதல் ஆகிய சேவைகளுக்கு ஆதார் அடைப்படையிலான கேசி சரிபார்ப்பு அவசியமாகும். இதற்காக மேராபேஸ் செயலி மூலம் முக அடையாளத்தை சரிபார்க்கும் நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் சரி செய்யப்பட்டு உரிய சோதனைகள் முடிந்த பின்னர் இந்த சேவைகள் அடுத்த கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என குடிமை பொருள் வழங்க மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் முத்து மீனா தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் ஸ்மார்ட் பிடிஎஸ் இணையதளம் வாயிலாகவும் அருகில் உள்ள பொது சேவை மையங்கள் வாயிலாகவும் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன