புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிங் குமார் கொலை வழக்கில் ஆறு பேர் கைது
புதுச்சேரி, அக்டோபர் 29: புதுச்சேரி ஜீவானந்தபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிங் குமார் என்கின்ற ராஜேந்திர குமார் கொலை வழக்கில் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பூத்துறை செல்லும் சாலையில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு ராஜேந்திர குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து ஆரோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பணப் பிரச்சனை காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கிருஷ்ணகுமார், ஹரிகாந்த் என்கின்ற கந்தசாமி, மணிகண்டன், ஷேக் தவ், விக்கி என்கின்ற விக்னேஷ் ஆகிய ஐந்து பேர் ஆரோவில் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தொடர்பான ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், பணம் கொடுக்க மறுததால் ராஜேந்திர குமார் கொலை செய்யப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கு ஏனாம் சிறையில் உள்ள பிரபல ரவுடி சுந்தர் தலைமையிலான கூட்டாளிகளுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐந்து பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் எல்லைப் பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் நான்கு வீச்சரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட ஆறு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

