காலாப்பட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு ஆறுதல்: மினி மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் (எ) ரமேஷ் உறுதி!
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடலோரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ. செந்தில் (எ) ரமேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள், மழை பாதிப்புகள் மற்றும் நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கடலோர மீனவ கிராமங்களில் மழை மற்றும் கடல் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட எம்.எல்.ஏ., மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். மழைக் காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அ. செந்தில் (எ) ரமேஷ், “காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நான்கு மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய ‘மினி மீன்பிடித் துறைமுகம்’ (Mini Fishing Harbour) அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் விரைவில் துரிதமாக மேற்கொள்ளப்படும்” என்று உறுதி அளித்தார்.
மேலும், மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும், அவர்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகள் முதலமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைந்து தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உள்ளூர் மீனவப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

