உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ புகார் கடிதம்
புதுச்சேரி, அக்டோபர் 29: புதுச்சேரி உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி மற்றும் மூடல் உத்தரவை மீறி செயல்படும் ஸ்பா நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட ஒன்பது ஸ்பா நிறுவனங்கள் கட்டாய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவற்றின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஐந்து ஸ்பாக்கள் மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளதாகவும், மீதமுள்ள நான்கு ஸ்பாக்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் இணைந்து 48 மணி நேரத்திற்குள் கூட்டாய்வு நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி அல்லது மூடல் உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். மேலும் இது குறித்த ஆய்வுகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை ஏழு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பூர்வ வழிமுறைகளை நாடப்போவதாகவும் வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.