புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளி பஜார் தொடக்கம்: காதி மற்றும் பட்டு ஆடைகளுக்கு 60% வரை சிறப்புத் தள்ளுபடி!

புதுச்சேரி:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மாநில கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தீபாவளி பஜார் – 2026’ சிறப்பு விற்பனை புதுச்சேரியில் இனிதே தொடங்கியது. முதலமைச்சர் ந. ரங்கசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் தொழில், வணிகத்துறை செயலர் விக்ரம் ராஜா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி சாரத்தில் அமைந்துள்ள கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் இளங்கோவன் குத்துவிளக்கேற்றி தீபாவளி பஜாரை முறைப்படி திறந்து வைத்தார். பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எளிதாக வந்து ஆடைகளைத் தேர்வு செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தீபாவளி பஜார் சிறப்பு விற்பனை அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் 26-ம் தேதி வரை தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட காதி ரக ஆடைகளுக்கு 50 முதல் 60 சதவீதம் வரை அதிரடித் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர வழக்கமான காதி பொருட்களுக்கு 30 சதவீதமும், பெண்களைக் கவரும் பாரம்பரிய தூய பட்டு சேலைகளுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மகாத்மா காந்தியடிகளின் காதித் தத்துவத்தைப் போற்றும் வகையிலும், உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த விற்பனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கிராமப்புற நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்குப் புதுச்சேரி சந்தையில் கூடுதல் வர்த்தக வாய்ப்பு உருவாகிறது.

உள்நாட்டு கைவினைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தற்சார்பு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தீபாவளி பஜாரை பொதுமக்கள் திரளாகப் பார்வையிட்டு, தூய காதி மற்றும் கிராமத் தொழில் பொருட்களை வாங்கிப் பயனடையுமாறு கதர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன