புதுச்சேரி

கவர்னர் கைலாஷ்நாதன் அதிரடி: புதுவையில் வாகனம் இல்லாத அரசு ஓட்டுநர்களை பிற துறைகளில் பயன்படுத்த உத்தரவு!

புதுச்சேரி, அக். 30: புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் வாகனங்கள் இல்லாத காரணத்தால் பணிகளின்றி உள்ள ஓட்டுநர்களை, தேவைப்படும் பிற துறைகளுக்கு பணியிடமாற்றம் செய்து பயன்படுத்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுவை அரசின் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஓட்டுநர்களில் சிலர், அரசு வாகனம் பழுதான பிறகோ அல்லது வாகனம் பயன்பாட்டில் இல்லாதபோதோ வேலையின்றி சம்பளம் பெறும் நிலை நிலவி வந்தது. புதிய வாகனம் அரசு சார்பில் ஒதுக்கப்படும் வரை அவர்கள் பணி செய்யாமல் இருக்கும் சூழல் பல துறைகளில் காணப்பட்டது. இது தொடர்பாக துணைநிலை ஆளுநருக்குப் பல்வேறு புகார்கள் சென்றன.

இதைத் தொடர்ந்து, வாகனம் கிடைக்கப்பெறாத ஓட்டுநர்களின் சேவையைத் திறம்பட பயன்படுத்தும் வகையில், அவர்களின் தேவை இருக்கும் பிற அரசுத் துறைகளில் பணியமர்த்த ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்புச் செயலர் முருகேசன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், கழகங்கள் மற்றும் வாரியங்களில் வாகனங்கள் இல்லாததால் பணி ஒதுக்கப்படாத ஓட்டுநர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஓட்டுநர்கள் இல்லாத துறைகள் ‘எவருமில்லை’ எனத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தனித்தனியாக அனுப்பாமல் ஒருங்கிணைந்த அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையை மிகவும் அவசரமானதாகக் கருதி, வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்குள் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதன் மென்பிரதியை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும் துறைச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary: Lieutenant Governor Kailashnathan has ordered that government drivers in Puducherry who have no vehicle assigned be posted to other departments that need them. A circular from Personnel and Administrative Reforms Deputy Secretary Murugesan asks all departments, public sector bodies, autonomous bodies, corporations and boards to submit details of such drivers in the prescribed form by 10 November, as a consolidated report.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன