ஆசிய பாரா போட்டிகளில் 15 பதக்கங்கள் வென்று சாதனை: தமிழக வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை: ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளைத் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
ஜப்பான் நாட்டில் அண்மையில் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் (5th Asian Para Games 2026) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், இந்திய அணிக்காக களமிறங்கிய தமிழக மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி அபார சாதனை படைத்தனர். குறிப்பாக 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைக் குவித்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் உலக அரங்கில் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், தாய்நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த வீரர், வீராங்கனைகளுக்கு நேரில் பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் சாதனை படைத்த தங்கைகள் கஸ்தூரி ராஜாமணி, பேபி சஹானா ரவி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், சந்தியா விஸ்வநாதன் மற்றும் தம்பிகள் மதன், சிவராஜன் சோலைமலை, நவீன் சிவக்குமார், தர்மராஜ் சோலைராஜ், ருத்திக் ரகுபதி, சுதர்சன் முத்துசாமி, சரவணக்குமார், ஹரிஸ் ஆகியோருக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பாரா தடகள வீரர்களுக்காக (Para Athletes) செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், சிறப்புப் பயிற்சிகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வீரர்கள் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர். அரசு தங்களுக்குத் தொடர்ந்து அளித்து வரும் முழு ஆதரவு சர்வதேச மேடைகளில் பதக்கங்களைக் குவிக்க பெரும் துணையாக இருந்ததாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தடைகளை உடைத்து சரித்திரம் படைத்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் வரும் காலங்களிலும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்ந்தார்.


