பா.ஜ.க. அரசை களங்கப்படுத்த ராகுல் காந்தி சதி செய்கிறார்: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் கடும் தாக்கு
புதுச்சேரி, நவ. 1: மத்திய பா.ஜ.க. அரசை களங்கப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகள் சதி செய்து வருவதாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கடுமையாக சாடியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தோடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.
தேர்தல் களத்தில் வெற்றி பெற்றால் அதனை ஜனநாயகத்தின் வெற்றி என்று கொண்டாடும் காங்கிரஸ், தோல்வியைத் தழுவும் போது தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோட்டு மக்கள் மத்தியில் வீண் மாயையை உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்கள், பல்கலைக்கழக மாணவர் தேர்தல் மற்றும் சமீபத்திய மேலவைத் தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து மகத்தான வெற்றிகளைப் பெற்று வருகிறது.
பா.ஜ.க.வின் இந்த அசுர வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், சமூக வலைதளங்கள் வாயிலாக பிரதமர் மோடி மீதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதும் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருகின்றன என்று அமைச்சர் விவரித்தார். வாக்குப்பதிவு நடைமுறைகள் மற்றும் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை நிராகரித்த அவர், மின்னணு வாக்குப்பதிவு முறைகளில் முறைகேடு செய்ய முடியும் என்றால் கேரளா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க.வே வென்றிருக்க முடியும் என சுட்டிக்காட்டினார். தேர்தல் நடைமுறைகளை குறை கூற நினைத்தால், கேரளாவில் வெற்றிபெற்ற
தங்களது எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா என்றும் அவர் சவால் விடுத்தார். எதிர்க்கட்சிகளின் இத்தகைய பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றும், அவர்களின் விஷமப் பிரச்சாரத்தைக் கண்டித்து வரும் 3-ஆம் தேதி புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முதல் கம்பன் கலையரங்கம் வரை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட உள்ளதாகவும் நமச்சிவாயம் தெரிவித்தார்.
