ஏனாம்

ஏனாமில் புதிய சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகம் திறப்பு: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மக்கள் பணிகளைத் தொடங்கினார்!

ஏனாம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தை (MLA Camp Office) பொதுப்பணித் துறை அமைச்சரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மல்லாடி கிருஷ்ணாராவ் முறைப்படி திறந்து வைத்தார்.

ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரி அலுவலக வளாகத்திலேயே இப்பதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை மங்களகரமான பூஜைகளுடன் நடைபெற்றது. தொடர்ந்து நாடா வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தனது இருக்கையில் அமர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா, புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அனுப் தாகூர் உள்ளிட்ட துறைசார்ந்த உயர் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, அலுவலகத்தைத் திறந்து வைத்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு பொன்னாடை போர்த்தியும், மலர்க்கொத்துகள் வழங்கியும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புதுச்சேரி தலைமை அலுவலகத்தை அணுகுவதில் உள்ள தூர இடைவெளியைக் கருத்தில் கொண்டு, ஏனாம் பிராந்திய மக்களின் கோரிக்கைகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளைத் தொய்வின்றி நிறைவேற்ற இந்த அலுவலகம் பயன்படும். அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களை விரைவாகச் சென்றடைவதை உறுதிசெய்யும் முக்கிய மையமாக இம்முகாம் அலுவலகம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன