புதுச்சேரி

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை: புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!

புதுச்சேரி, 02/11/2026: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி, கடலூர், சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய 5 முக்கிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று நகர்ந்து வரும் சூழலில், கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியாக துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு விடுக்கப்படும் வழக்கமான எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 3-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டதை அடுத்து, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறும், கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை பாதுகாப்பான மேடான இடங்களுக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அவசர நிலைமைகளைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

English summary: Storm warning cage number 3 has been hoisted at five ports, Puducherry, Cuddalore, Chennai, Ennore and Kattupalli, because of a storm system in the Bay of Bengal. The Meteorological Department warned of coastal winds of 40 to 50 km/h, gusting to 60 km/h. Fishermen in Puducherry have been told not to go to sea, those already at sea to return, and people have been asked to avoid the beach, with control rooms kept ready.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன