தமிழ்நாடு

விராலிமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி: முதலமைச்சரிடம் ஜோதிமணி எம்பி நேரில் வலியுறுத்தல்!

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான நடைமுறைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னிமலை, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விராலிமலை பகுதியில் அரசு கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தின் வாயிலாக உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, விராலிமலையில் புதிய கல்லூரி அமைப்பதற்குச் சாதகமான பதிலும் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இத்திட்டத்திற்கான அடுத்தகட்ட நிர்வாக மற்றும் கள நடைமுறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் முதலமைச்சரை இன்று நேரில் சந்தித்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது, புதிய கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான அரசு நிலம் மற்றும் கல்லூரிப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு ஏதுவாகத் தற்காலிகக் கட்டட வசதிகளும் தயார் நிலையில் இருப்பதை அவர் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

விராலிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களின் மாணவ, மாணவியர் தற்போது உயர்கல்வி கற்பதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். புதிய கல்லூரி தொடங்கப்படும் பட்சத்தில் அவர்களின் மேற்படிப்புக்கான வாய்ப்புகள் விரிவடையும். விராலிமலை பகுதி மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கையின் மீது அரசு விரைந்து நல்லதொரு முடிவை எடுக்கும் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன