தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சி; ஆந்திராவுக்கு செல்லும் முதலீடுகள்: தமிழக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி!

சென்னை: தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வெறும் 3 சதவீதமாகக் குறைந்து, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திப் பதிவில், “ஒருபுறம் தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம், தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அனைத்தும் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றன. இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் ரூ.1,614 கோடி முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திராவிற்கு கொண்டு சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், திரைப்பட பாணியில் தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகளை எல்லாம் ‘டேக் டைவர்ஷன்’ (Take Diversion) செய்து அண்டை மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்புகள் உருவாகி, அதன்மூலம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம் உயர்ந்தால் மட்டுமே மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து ஜிஎஸ்டி வருவாய் உயரும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லை என அவர் சாடினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொழில் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பை தற்போதைய ஆட்சியாளர்கள் சீர்குலைத்துவிட்டதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, நிர்வாகம் பற்றிய புரிதல் இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், பெரும் போராட்டங்களுக்கு இடையே கட்டமைக்கப்பட்ட தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை பாழாக்கிவிடக் கூடாது எனவும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


