சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே பயணிகள் படகு சேவை: தமிழக கடல்சார் வாரியம் டெண்டர் அறிவிப்பு!
புதுச்சேரி: சென்னையில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு கடல்வழியாக பயணிகள் படகு சேவையைத் தொடங்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் விரிவான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலைப் போக்குவரத்து நெரிசலின்றி கடல்வழியே இனிமையாகப் பயணம் செய்ய முடியும்.
சுமார் 80 கடல் மைல் (Nautical Miles) தொலைவு கொண்ட இத்தடத்திற்கு படகுப் போக்குவரத்து தொடங்குவது குறித்து அதிகாரிகள் தரப்பில் ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, கிழக்குக் கடற்கரை சாலையில் (ECR) ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையிலும் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. படகு சேவையில் சொகுசு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சர்வதேச தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடல்வழி படகுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தவும் இயக்கவும் தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இதில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 1-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெண்டர் நடைமுறைகள் முடிவடைந்ததும் படகு சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

