புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மரில் ஒப்பந்த அடிப்படையிலான ஆராய்ச்சிப் பணி: விண்ணப்பிக்க அழைப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JIPMER) தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் (Department of Preventive and Social Medicine), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நிதியுதவியுடன் செயல்படும் திட்டத்திற்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் ‘ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் – II’ (Project Technical Support – II) பிரிவில் ஒரு காலிப்பணியிடமும், ‘ப்ராஜெக்ட் நர்ஸ் – II’ (Project Nurse – II) பிரிவில் 4 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இரு பணிகளுக்கும் தலா மாத ஊதியமாக ரூ.24,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகச் செயல்படக்கூடியவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, டெக்னிக்கல் சப்போர்ட் பணிக்கு 3 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்.எஸ். எக்ஸெல் மற்றும் கணினி அறிவுடன் தமிழ், ஆங்கில மொழிகளில் பேசும் திறன் அவசியமாகும். செவிலியர் பணிக்கு பி.எஸ்.சி நர்சிங் அல்லது பி.எஸ்.சி எம்.எல்.டி முடித்து இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். களப்பணிக்காக செல்ல இருசக்கர வாகனம் மற்றும் முறையான ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் பொருந்தும். மேலும் இப்பணிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாகத் தேர்வு செய்யப்படுவர்.

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் அதிகாரப்பூர்வ படிவத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் ஒரே பி.டி.எப் (PDF) கோப்பாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 2026 நவம்பர் 6-ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தனித்தனியாக ஒவ்வொரு பதவிக்கும் தனி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன