காட்டேரிக்குப்பம் அஷ்டலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேக விழா
புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரி மாநிலம் மன்னாடிப்பட்டு கம்யூன் காட்டேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரநாயகி உடனுரை அஷ்டலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களுக்கும், சுந்தரநாயகி அம்மன், அஷ்டபைரவர்கள், நவகிரக விநாயகர், முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன.
இதில் காட்டேரிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டின் முடிவில் சிவபெருமானுக்கு சாற்றப்பட்டிருந்த அன்னம் மற்றும் காய்கறிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதோடு, விழாவின் நிறைவாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


