தமிழகத்தின் ஜிஎஸ்டி வரி வசூல் சரிவு: தொழில் வளர்ச்சி மந்தநிலைக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை:
தமிழகத்தின் கடந்த ஆறு மாத கால ஜிஎஸ்டி வரி வருவாய் நிலை, அரசின் நிதி முன்னுரிமைகள் மற்றும் பொருளாதார அணுகுமுறை ஆகியவை குறித்து கே.அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய், பண்டிகைக் காலம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த போதிலும், அக்டோபர் மாதத்தில் ஒற்றை இலக்க அளவில் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பது கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிஎஸ்டி வருவாய் குறைவுக்கு ஐஜிஎஸ்டி (IGST) பகிர்வை ஒரு காரணமாகக் கூறுவது ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டிற்கு இணையான பொருளாதார சூழலைக் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் ஜிஎஸ்டி வசூலில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. தமிழகத்தில் அனைத்து அரசுத் துறைகளிலும் மூலதனச் செலவினங்கள் (Capital Expenditure) கடந்த ஆறு மாதங்களாகக் கடுமையான மந்தநிலையைச் சந்தித்துள்ளன. அரசின் மூலதனச் செலவினங்கள் குறையும்போது வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள் மற்றும் ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு மாநிலப் பொருளாதாரம் பலவீனமடையும்” என்று எச்சரித்துள்ளார்.
மேலும் தொழில்துறை பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டு தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொழில்துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added – GVA) தமிழகத்தின் பங்களிப்பு வெறும் 10.26 சதவீதமாக மட்டுமே சரிந்து, தேசிய அளவில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு 10.3 சதவீதமாக இருந்த இந்த பங்களிப்பு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எந்தவித முன்னேற்றமும் இன்றி அதே நிலையில் நீடிக்கிறது. பிற மாநிலங்கள் தமிழகத்தை விட வேகமாக முன்னேறி வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் வளர்ச்சி சமநிலையை மேம்படுத்த வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, “மாநிலத் திட்டக்குழு வெளியிடும் மாவட்ட அளவிலான பிராந்திய ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் மட்டுமே தீர்வாகாது. வகுப்பில் கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத் கூடுதல் சிறப்புப் பயிற்சி தேவைப்படுவது போல, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களைக் கண்டறிந்து அங்கு முதலீடுகளையும் வேலைவாய்ப்புகளையும் கொண்டு சேர்க்க தமிழக அரசு தனித்துவமான சிறப்புத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.