தமிழ்நாடு

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் நிலையில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

சென்னை, அக்டோபர் 25: வங்கக்கடலில் நிலவிய காற்றெழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றெழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ள நிலையில், இது நாளை புயலாக வலுபெறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தீவிர புயலாக வலுபெற்று ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே வரும் 28ஆம் தேதி கரையை கடக்க உள்ளதாகவும், அப்போது மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எண்ணூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை, மாமல்லபுரம், கல்பாக்கம், பொன்னேரி, திண்டிவனம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. மரக்காணத்தில் கனமழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. கிருஷ்ணகிரி நேதாஜி நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பாட புத்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வீணாகின. விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சிந்தாமணி தெரு, திருவண்ணை நல்லூர் அருகே மேலமங்கலம் மற்றும் உதகையில் வண்டிப்பேட்டை, அகரகாரம் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. புதுச்சேரியிலும் பெய்து வரும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளையும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன