தகுதியான மீனவர்களுக்கு நிலுவை தொகையுடன் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க தற்காலிக சபாநாயகர் வலியுறுத்தல்
புதுச்சேரி, நவம்பர் 1: புதுவையில் அனுமதி அட்டை பெற்ற தகுதியான மீனவர்களுக்கு எட்டு மாத கால நிலுவை தொகையுடன் சேர்த்து முதியோர் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கு அவர் அளித்துள்ள மனுவில், புதுவையில் 50 வயது நிறைவடைந்த மீனவர்களுக்கு மாதம்தோறும் முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியின் போது ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்திருந்த 700க்கும் மேற்பட்ட தகுதியுடைய மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான அனுமதி அட்டை கடந்த மார்ச் மாதம் மீன்வளத்துறையால் வழங்கப்பட்டது.
ஆனால் மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை எட்டு மாத காலமாக மீனவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மீனவர் ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இன்றுவரை பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை வழங்கப்படாமல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இச்சிக்கலில் தலையிட்டு மாதாந்திர நிதி உதவி தொகையை எட்டு மாத காலத்திற்கும் சேர்த்து வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
English summary: Puducherry’s temporary Speaker Anbalagan has urged that eligible fishermen holding approval cards be given old-age pension along with eight months’ arrears. In a petition to Minister Mallady Krishna Rao, he said over 700 eligible fishermen received approval cards in March but have received no monthly assistance from March to October. He said funds were allotted in the budget session, but no government order has yet been issued to disburse the aid.

