புதுச்சேரி கிருஷ்ணா நகரில் தேங்கிய மழைநீர்: முறையாக வெளியேற்றக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரி கிருஷ்ணா நகர் 12-வது குறுக்குத் தெரு விரிவாக்கப் பகுதியில் மழைநீரை முறையாக வெளியேற்றக் கோரியும், சாலை வசதி ஏற்படுத்தித் தரக் கோரியும் அப்பகுதி பொதுமக்கள் திடீரென பணிகளைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா நகர் 12-வது குறுக்குத் தெரு விரிவாக்கப் பகுதியில் பல குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், அங்கு நீண்ட காலமாக முறையான தார் சாலை மற்றும் பக்கவாட்டு மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாகப் பெய்த தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றி மழைநீர் பெருமளவில் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், அவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் அருகில் உள்ள பிற குடியிருப்புப் பகுதிகளை பாதிக்கும் வகையிலும், போதிய வடிகால் வசதி இல்லாததால் மீண்டும் அதே இடத்திற்கே திரும்பும் நிலையிலும் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர். தற்காலிகமாக மோட்டார் மூலம் தண்ணீரை இறைப்பதை விடுத்து, நிரந்தர வடிகால் வாய்க்கால் மற்றும் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் அப்பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே புதுச்சேரி நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய பலத்த மழையின் காரணமாக ஒரே நாளில் 48.2 மி.மீ. வரை மழை பதிவாகி, தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. அப்போது பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொண்ட போதிலும், போதிய கட்டமைப்பு இல்லாத விரிவாக்கப் பகுதிகளில் பிரச்சனை தீராமல் நீடித்து வருகிறது. கிருஷ்ணா நகர் விரிவாக்கப் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரால் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மழைநீரை முழுமையாக அப்புறப்படுத்த மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அப்பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர்.


