காரைக்கால்

காரைக்காலில் கடல் அரிப்பைத் தடுக்க 2,000 பனை விதைகள் நடும் இயக்கம்: காரைக்கால்மேடு கடற்கரையில் அதிகாரிகள் தொடக்கம்!

காரைக்கால்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் தீவிரமடைந்து வரும் கடல் அரிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், உலக பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால்மேடு கடற்கரையில் சுமார் 2,000 பனை விதைகளை நடும் மாபெரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை, ஆப்த மித்ரா தன்னார்வலர்கள் மற்றும் குடிமைப் பாதுகாப்புப் படை ஆகியவை ஒருங்கிணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில், மாவட்டத் துணை ஆட்சியர் பாலு (எ) பக்கிரிசாமி தலைமை தாங்கி, பனை விதைகளை நடும் பணிகளைத் தொடங்கி வைத்தார். காரைக்கால் வனத்துறை அதிகாரி நந்தகுமார், ஆப்த மித்ரா ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ராமன், மணிகண்டன், நுகர்வோர் அமைப்பின் மாநிலச் செயலாளர் சிவகுமார், பூம்புகார் பனை அறக்கட்டளை ரவீந்தர், பாரதி மற்றும் அப்துல் கலாம் பாசமலர் அமைப்பைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

கடற்கரையோரங்களில் பனை மரங்கள் இயற்கை அரணாகச் செயல்பட்டு மணல் அரிப்பைத் தடுப்பதுடன், புயல் மற்றும் ஆழிப்பேரலை போன்ற இயற்கை இடர்பாடுகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதனை உணர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் முதற்கட்டமாக 2,000 பனை விதைகளை நட்டுப் பராமரிக்க விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைக்கால் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் அவ்வப்போது புயல் மற்றும் கடல் சீற்றங்களால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், இத்தகைய உயிரியல் பாதுகாப்பு அரண்கள் மீனவ கிராமங்களைப் பாதுகாக்கும் முக்கிய கேடயமாக அமையும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். காரைக்கால்மேடு மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் இத்திட்டத்தில் ஆர்வமுடன் களம் கண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன