தமிழ்நாடு

கோவை சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்: தொடர்கதையாகும் சிறைப்பாதுகாப்பு குளறுபடிகள் – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

சென்னை: கோவை மத்திய சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிப்பது தொடர்கதையாகி சட்டம்-ஒழுங்கு கேலிக்கூத்தாக மாறியுள்ளதாகவும் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சிறைக் கைதிகள் தப்பித்துச் செல்வது சின்னத்திரை மெகா சீரியல் போன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சாடியுள்ளார். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் விலைவாசி உயர்வு வரிசையில் தற்போது சிறை பாதுகாப்புக் குளறுபடிகளும் முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி, புழல், சேலம் என மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் கைதிகள் தப்பும் போதெல்லாம் சிறைத்துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம், கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நியமிக்கிறோம் என்று வெற்று அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின்றனவே தவிர, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் இல்லை என அவர் விமர்சித்துள்ளார். சிறைத்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அரசு எச்சரித்த சில மணி நேரங்களிலேயே கோவை சிறையில் கைதி தப்பியோடியிருப்பது நிர்வாகத்தின் தீவிர மெத்தனப் போக்கையே காட்டுகிறது என்றும் அவர் விவரித்துள்ளார்.

ஏற்கனவே, சென்னை புழல் சிறையிலிருந்து கைதிகள் தப்பிய அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாகவே, தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. அந்த வரிசையில் தற்போது கோவை மத்திய சிறையிலும் பாதுகாப்பு குறைபாட்டால் விசாரணைக் கைதி ராகவன் தப்பியோடியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இத்தகைய கடுமையான குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் தப்பிச் செல்வது மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, வெற்று அறிக்கைகளுடன் நின்றுவிடாமல் தப்பியோடிய கைதியை உடனடியாகப் பிடிக்கவும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளின் பாதுகாப்பை சமரசமின்றி பலப்படுத்தவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary: Edappadi K. Palaniswami condemned the escape of under-trial prisoner Raghavan from the Coimbatore Central Prison, saying in a statement that prison escapes in Tamil Nadu have become a continuing series and that law and order has become a mockery. He alleged that after each escape the government makes only empty announcements about strengthening prison security, citing earlier escapes from Theni, Puzhal and Salem prisons, and said the Coimbatore escape came hours after the government warned prison officers to be vigilant. He urged quick action to catch the escaped prisoner and to strengthen prison security across the state.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன