தமிழ்நாடு

UHC திட்ட செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்: சென்னை எழும்பூர் போராட்டத்தில் மனோ தங்கராஜ் நேரில் ஆதரவு!

சென்னை:
அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமவேலைக்கு சம ஊதியம் என்ற உரிமையின் அடிப்படையில், நகர்ப்புற நலவாழ்வு மைய (UHC) திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் (Urban Health Centres – UHC) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை எழும்பூரில் தொடர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேரில் கலந்துகொண்ட மனோ தங்கராஜ், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் சமவேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், நகர்ப்புற நலவாழ்வு மையத் திட்டத்தின் கீழ் மக்களின் உயிர்காக்கும் உன்னத பணியில் தங்களை அர்ப்பணித்துள்ள செவிலியர்களுக்கு மாதம் வெறும் ரூ.21,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எவ்வித பணிப் பாதுகாப்போ அல்லது எதிர்கால உத்தரவாதமோ வழங்கப்படவில்லை.

மேலும், இச்செவிலியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF), பயணப்படி (TA), அகவிலைப்படி (DA), பதவி உயர்வு (Promotion) மற்றும் பணியிட மாறுதல் (Transfer) போன்ற அடிப்படைச் சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. பெண் செவிலியர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான மகப்பேறு விடுப்பு (Maternity Leave), மருத்துவ விடுப்பு (Medical Leave) மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் கூட மறுக்கப்படுவது மிகுந்த வேதனைக்குரியது” என்று சுட்டிக்காட்டினார்.

அரசு மருத்துவக் கட்டமைப்பில் அடித்தளமாக நின்று இரவு பகலாகச் சேவையாற்றும் இச்செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடிப் பேச்சுவார்த்தை நடத்தி பணி நிரந்தர அரசாணையை வெளியிட வேண்டும் என்றும் போராட்டக் களத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன