புதுச்சேரி

பங்கு மூலதனம் வழங்கி கூட்டுறவு நகர வங்கியை காப்பாற்ற வேண்டும்: பேராசிரியர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை

புதுச்சேரி, அக்.26: புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கிக்கு அரசு பங்கு மூலதனம் வழங்கி, அதனை மீட்டெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1955-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கமாக தொடங்கப்பட்டு, பின்னர் 1990-ல் முழுமையான வங்கியாக உரிமம் பெற்ற கூட்டுறவு நகர வங்கி புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தது. கடந்த 2022-2023 காலகட்டத்தில் 26,336 உறுப்பினர்கள், ரூ.527.6 கோடி வைப்புத்தொகை, 6 கிளைகள், சொந்த கட்டிடம் மற்றும் 2-ம் அடுக்கு வங்கி அந்தஸ்து பெற்று சிறு வியாபாரிகள், அரசு ஊழியர்களுக்கு பேருதவியாக இயங்கி வந்தது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வாராக்கடன்கள் பெருமளவு அதிகரித்ததாலும், அளவுக்கு அதிகமான ஆட்கள் நியமனத்தாலும் வங்கியின் நஷ்டம் ரூ.25 கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பலமுறை எச்சரித்தும், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்தும் அரசும் நிர்வாகமும் எவ்வித சீர்திருத்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆர்.பி.ஐ., வைப்புதாரர்களுக்கு ரூ.5,000-க்கு மேல் வழங்கக்கூடாது, புதிய கடன், முதலீடு, புதிய வைப்புத்தொகைகள் பெறக்கூடாது என 6 மாத கால கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது வங்கியை நிரந்தரமாக மூடும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இதற்கு வங்கி நிர்வாகமும், கூட்டுறவுத்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சருமே பொறுப்பாவார்கள். ஏற்கனவே பல பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஸ்பின்கோ ஆலை மூடப்பட்டது போன்று இந்த வங்கியும் முடங்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே, முதலமைச்சர் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, வங்கிக்குத் தேவையான பங்கு மூலதனத்தை வழங்குவதோடு, நிலுவையிலுள்ள வாராக்கடன்களை வசூலிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, கூட்டுறவு முறைப்படி தேர்தல் நடத்தி வங்கியைப் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன